ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட புகார் - ராணிப்பேட்டை கனிம வளத்துறை இணை இயக்குநர் சீனிவாச ராவ் சஸ்பெண்ட்
சென்னை, 20 மே (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி ஒன்றில் அனுமதி வழங்குவதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில், புவியியல் மற்றும் கனிம வளத்துறை இணை இயக்குநர் சீனிவாச ராவ்-ஐ பணியிடை நீக்கம் செய்து கனிம வள
ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட புகார் - ராணிப்பேட்டை கனிம வளத்துறை இணை இயக்குநர் சீனிவாச ராவ் சஸ்பெண்ட்


சென்னை, 20 மே (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி ஒன்றில் அனுமதி வழங்குவதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில், புவியியல் மற்றும் கனிம வளத்துறை இணை இயக்குநர் சீனிவாச ராவ்-ஐ பணியிடை நீக்கம் செய்து கனிம வளத்துறை அமைச்சர் டி கே பிரபு உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி உரிமையாளர் ஒருவரிடம், குவாரி தொடர்பான அனுமதிகளை வழங்குவதற்காக இணை இயக்குநர் சீனிவாச ராவ் ரூ.2 லட்சம் லஞ்சம் கோரியதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் புகாருக்கு முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச புகாரில் சிக்கிய இணை இயக்குநர் சீனிவாச ராவ்-ஐ உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு அமைச்சர் டி கே பிரபு உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான துறை ரீதியான விசாரணை நடத்தவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

கனிம வளத்துறையில் லஞ்ச ஊழலை முற்றிலுமாக ஒழித்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிகாரிகள் யாராக இருந்தாலும் லஞ்ச புகார் உறுதியானால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b