Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறுகையில்,
மருந்துகளின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு அதிகாரிகள் மாவட்ட அளவில் மருந்து இருப்பு, விநியோகம் மற்றும் தட்டுப்பாடு குறித்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும், பொதுமக்கள் அவசர தேவைக்கு மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக தனித்தனி உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி எண்களை தொடர்பு கொள்ளும் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் உடனுக்குடன் கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
வேலைநிறுத்தம் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 5,000 பிரதான மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
இதனால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அத்தியாவசிய மற்றும் அவசரகால மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும்.
ஆன்லைன் மருந்து விற்பனையால் போலி மருந்துகள் புழக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மருந்தக உரிமையாளர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
அதே சமயம், தமிழக மக்களின் உயிர் காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் வராமல் பார்த்துக்கொள்வது மாநில அரசின் கடமை.
மருந்து தட்டுப்பாடு தொடர்பான புகார்கள் இருப்பின் பொதுமக்கள் அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அல்லது மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறையையோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b