முன்னாள் உத்தரகாண்ட் முதல்வர் மேஜர் ஜெனரல் பி.சி. கண்டூரி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
டேராடூன், 20 மே (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) புவன் சந்திர கண்டூரி (91) காலமானதைத் தொடர்ந்து, இன்று அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடியரசு துணைத் தல
முன்னாள் உத்தரகாண்ட் முதல்வர் மேஜர் ஜெனரல் பி.சி. கண்டூரி உடல்  அரசு மரியாதையுடன் நல்லடக்கம்


டேராடூன், 20 மே (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) புவன் சந்திர கண்டூரி (91) காலமானதைத் தொடர்ந்து, இன்று அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் டேராடூனில் உள்ள கண்டூரியின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குர்மித் சிங்கும் மறைந்த தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

டேராடூன் வசந்த் விஹாரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேஜர் ஜெனரல் கண்டூரியின் பூத உடல் முழு அரசு மரியாதையுடன் பல்பீர் சாலையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் அமைச்சரவை உறுப்பினர்கள், மூத்த பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், காலையிலேயே கண்டூரியின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மூத்த தலைவர் கண்டூரியின் மறைவையொட்டி, உத்தரகாண்ட் அரசு மே 19 முதல் மே 21 வரை மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு சார்பில் எந்தவித கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கண்டூரியின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டன.

1934 இல் பிறந்த புவன் சந்திர கண்டூரி, இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசியலில் நுழைந்த பிறகு, 1991 முதல் 2009 வரை கார்வால் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மேற்பரப்பு போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார்.

உத்தரகாண்ட் மாநிலம் உருவான பிறகு, 2007 முதல் 2009 வரையிலும், மீண்டும் 2011 முதல் 2012 வரையிலும் இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அவரது ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்காக பரவலாக அறியப்பட்டார். ‘கண்டூரி சட்டம்’ என அழைக்கப்படும் ஊழல் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ராணுவ சேவை என இரண்டிலும் முத்திரை பதித்த மேஜர் ஜெனரல் கண்டூரியின் மறைவுக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b