Enter your Email Address to subscribe to our newsletters

மாதவரம், 20 மே (ஹி.ச.)
சென்னை மாதவரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதவரம் பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாதவரம் சாஸ்திரி நகர் அருகே மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு சிறுவர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் புழல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
சிறுவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மாதவரம் அடுத்த பால்பண்ணை – மாத்தூர் பாலசுப்ரமணியம் நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு காயலான் கடை நடத்தி வந்த ராமமூர்த்தி (27) மற்றும் அவரது நண்பரான திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கதிர்வேல் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, சென்னை பகுதியில் அதிக லாபத்துடன் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நான்கு பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட இரு சிறுவர்கள் சிறார் காப்பகத்திற்கும், மற்ற இருவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P