கோயில் தங்க நகைகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை - வதந்திகளுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் மறுப்பு
புதுடெல்லி, 20 மே (ஹி.ச.) நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் மத நிறுவனங்களிடம் உள்ள தங்க நகைகளை அரசு கையகப்படுத்தி, அதற்கு மாற்றாக தங்கப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பரவிய தகவல்களுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்
நிதி


புதுடெல்லி, 20 மே (ஹி.ச.)

நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் மத நிறுவனங்களிடம் உள்ள தங்க நகைகளை அரசு கையகப்படுத்தி, அதற்கு மாற்றாக தங்கப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பரவிய தகவல்களுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட விளக்கத்தில்,

கோயில் அறக்கட்டளைகள், மடங்கள் அல்லது பிற மத நிறுவனங்கள் வசமுள்ள தங்க நகைகளை பணமாக்கும் அல்லது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எந்தவொரு திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயில்களின் தங்க இருப்புக்கு மாற்றாக “சாவரின் கோல்டு பாண்ட்” எனப்படும் தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும் என்ற தகவல்களும் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் வழிதவறச் செய்பவை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் மற்றும் சில தளங்களில், கோயில்களின் தங்கச் சேமிப்புகளை தேசிய சொத்தாக அறிவித்து, அவற்றை அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக பரவும் தகவல்களை மக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P