அரசு மருத்துவமனையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள் - அமைச்சர் அருண்ராஜ்
சென்னை, 20 மே (ஹி.ச.) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய
Arun


சென்னை, 20 மே (ஹி.ச.)

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்,

நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியை நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சராக வந்து பார்வையிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. சுகாதாரத்துறை தொடர்பாக முதலமைச்சர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார் என்றார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழல் இல்லை என்ற எண்ணத்தால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து வசதிகளும் இருப்பதாகவும், நோயாளிகளின் தேவைக்கேற்ப உடனடி சிகிச்சை அளிக்கும் சூழல் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். தனியார் மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது. அரசு மருத்துவமனைகளில் அதே சிகிச்சை இலவசமாக கிடைக்கிறது. அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் வகையில் மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிட மாற்ற கவுன்சிலிங் விரைவில் நடைபெறும் என்றும், அது முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று முதலமைச்சர் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பிணவறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்ற வழக்குகள் காரணமாக சில உடல்கள் அங்கு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் சிகிச்சை பெறுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள்? கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ