Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 20 மே (ஹி.ச.)
புதிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பை கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் மொழி மற்றும் கல்வி அமைப்பில் ஒரே மாதிரியான கட்டுப்பாட்டை திணிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மூன்று மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.
தமிழகம் என்பது மொழி, பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை உயிராகக் காக்கும் மண். தமிழ் மொழிக்காக எண்ணற்ற போராட்டங்களையும் தியாகங்களையும் செய்த வரலாறு கொண்ட மாநிலத்தில் எந்த வடிவிலும் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கை தான் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், தாய்மொழி பாதுகாப்பிற்கும், உலகளாவிய போட்டித் திறனுக்கும் ஏற்ற சிறந்த கல்வி முறை ஆகும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளே தமிழக மாணவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கின்றன.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியை மத்திய மயமாக்கும் முயற்சிகளும் கவலை அளிக்கின்றன. கல்வி என்பது மாநிலங்களின் உரிமை. மாநிலங்களின் மொழி, பண்பு, சமூக சூழல் ஆகியவற்றை புறக்கணித்து ஒரே மாதிரியான கல்விக் கொள்கையைத் திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.
மேலும், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி தொடர்பான நிதிகளை வழங்காமல் மத்திய அரசு செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மாணவர்களின் நலன், பள்ளிக் கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிதியை அரசியல் நோக்கத்துடன் தடுத்து நிறுத்துவது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையே பாதிக்கும் செயலாகும். மாநில உரிமைகளை மதிக்காமல், மொழிக் கொள்கையை அழுத்தமாக பயன்படுத்தி நிதியை மறுப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.
தமிழ் மொழி உலகின் தொன்மையான செம்மொழி மட்டுமல்ல; அறிவியல், இலக்கியம், மருத்துவம், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பெருமை மிக்க அறிவுக் களஞ்சியம் ஆகும். அத்தகைய தமிழ் மொழியின் உரிமை மற்றும் வளர்ச்சியைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
எனவே, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் பெயரில் இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட்டு, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து கல்வி மற்றும் வளர்ச்சி நிதிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழ் மொழியின் உரிமை, தமிழர் பண்பாடு மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்க தமிழக மக்கள் என்றும் உறுதியாக குரல் கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN