Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர் , 20 மே (ஹி.ச.)
நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் அணிகள் மோதின.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க வீரர்களாக மார்ஷ், இங்லிஸ் களமிறங்கினர்.
இருவரும் அதிரடி ஆட்டம் காட்டி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் சேர்த்தனர். இங்லிஸ் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் மார்ஷுடன் பூரன் இணைந்து விளையாடினார்.
மார்ஷ் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். பூரன் 16 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பந்த் களமிறங்கி வேகமாக ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் பந்த் ரன் அவுட்டானார். சதம் நோக்கி சென்ற மார்ஷ் 96 (57) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யஷ் ராஜ் புஞ்ஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இணைந்து சிறப்பான தொடக்கம் அமைத்தனர். ஜெய்ஸ்வால் 43 (23) ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து சூர்யவன்ஷி–துருவ் ஜுரேல் ஜோடி அதிரடியாக விளையாடி லக்னோ பந்துவீச்சை சிதறடித்தது. சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். மறுபுறம் ஜுரேல் 53 (38) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA