காஞ்சிபுரம் டெண்டர் முறைகேடு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை, 20 மே (ஹி.ச) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான டெண்டர் அறிவிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சித்துறை சார்ப
Tamil Nadu Secretariat


சென்னை, 20 மே (ஹி.ச)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான டெண்டர் அறிவிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித்துறை சார்பில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிக்குப்பம் ஊராட்சியின் காரைப்பேட்டை பகுதியில், 2025-26ஆம் ஆண்டு 15வது மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.16.83 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்காக கடந்த 19ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டர் அறிவிப்பு காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒப்பந்த விதிமுறைகளின்படி, 12.05.2026 முதல் 19.05.2026 வரை ஒப்பந்ததாரர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் டெண்டர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 18.05.2026 அன்று மட்டுமே ஒப்பந்தப்புள்ளி உருவாக்கப்பட்டு, 19.05.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக தெரியவந்தது.

இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகிய கால டெண்டருக்கு முன் அனுமதி பெறாதது மற்றும் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இரண்டு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. சாந்தி மற்றும் உதவி பொறியாளர் எல். கயல்விழி ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ