Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 20 மே (ஹி.ச.)
கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
குறிப்பாக விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக, படகு சேவையை பயன்படுத்த பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நெரிசலை குறைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் நோக்கில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஏற்கனவே மூன்று படகுகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக இரண்டு சுற்றுலா படகுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் இன்று முதல் மொத்தம் ஐந்து சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கூடுதல் படகுகள் இயக்கப்படுவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை குறையும் என்றும், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் சென்று வர முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடியும் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவைக்கேற்ப மேலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN