40 ஆண்டுகளுக்கு பின்னர் காரைக்கால் - பேரளம் ரயில் பாதை இன்று முதல் மீண்டும் இயக்கம்
காரைக்கால் , 20 மே (ஹி.ச.) வரலாற்று சிறப்புமிக்க காரைக்கால் - பேரளம் ரயில் வழித்தடம், சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் பயணிகள் சேவைக்கு திரும்பியுள்ளது. 1984-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக இயங்கி நிறுத்தப்பட்ட இந்த 2
Karaikal–Peralam Railway Line Resumes


காரைக்கால் , 20 மே (ஹி.ச.)

வரலாற்று சிறப்புமிக்க காரைக்கால் - பேரளம் ரயில் வழித்தடம், சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் பயணிகள் சேவைக்கு திரும்பியுள்ளது.

1984-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக இயங்கி நிறுத்தப்பட்ட இந்த 23.5 கிலோமீட்டர் வழித்தடம், தற்போது அகல ரயில் பாதையாக முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழித்தடத்தின் முக்கிய அம்சமாக, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருநள்ளாறு ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருகை தரும் பக்தர்களுக்கு இந்த ரயில் நிலையம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது. சனிப்பெயர்ச்சி போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இனி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மதியம் சரியாக 12:45 மணியளவில், காரைக்காலில் இருந்து திருநள்ளாறு மற்றும் பேரளம் வழியாக மயிலாடுதுறைக்கு முதல் பயணிகள் ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதனுடன், இதுவரை நாகப்பட்டினம் வழியாக இயக்கப்பட்டு வந்த வேளாங்கண்ணி - தாம்பரம் விரைவு ரயிலும் இன்று முதல் திருநள்ளாறு, பேரளம் மார்க்கமாக பாதை மாற்றி இயக்கப்படுகிறது.

இதன் மூலம் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கும், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கும் நேரடி ரயில் இணைப்பு கிடைத்துள்ளது.

காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு ஆகிய நான்கு முக்கிய புனிதத் தலங்களை இணைக்கும் இந்த ரயில் பாதை, ஆன்மிக சுற்றுலாவை பெருமளவு ஊக்குவிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும், காரைக்கால் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு சரக்கு போக்குவரத்து எளிதாவதால், இப்பகுதியின் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரயில் சேவை பெரும் உந்துதலாக அமையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கவும், திருநள்ளாறில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை நேரடி சேவைகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

Hindusthan Samachar / vidya.b