கொடைக்கானல் கோடை விழாவுடன் 63-வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடக்கம்
கொடைக்கானல், 20 மே (ஹி.ச) மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய அங்கமான மலர் கண்காட்சி, பிரையன்ட் பூங்காவில் இன்று வண்ணமயமாக தொடங்குகிறது. திண்டுக்கல் மாவ
கொடைக்கானல்  கோடை விழாவுடன் 63-வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடக்கம்


கொடைக்கானல், 20 மே (ஹி.ச)

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய அங்கமான மலர் கண்காட்சி, பிரையன்ட் பூங்காவில் இன்று வண்ணமயமாக தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

63-வது மலர் கண்காட்சி இன்று முதல் மே 31-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கோடை விழாவுடன் இணைந்து நடைபெறும் இந்த கண்காட்சியை மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடங்கி வைக்கின்றனர்.

இந்த ஆண்டு கண்காட்சியில் டேலியா, சால்வியா, பிரெஞ்ச் மேரிகோல்ட், பெட்டூனியா, கார்னேஷன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மலர் செடிகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் மலர்களால் உருவாக்கப்பட்ட யானை, மயில், தமிழ்த்தாய் உருவங்கள் இந்த ஆண்டின் சிறப்பு ஈர்ப்பாக அமைந்துள்ளன. மேலும், பிரையன்ட் பூங்காவின் ரோஜா தோட்டத்தில் 95 வகை ரோஜாக்கள், அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் கற்றாழை செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோடை விழாவை முன்னிட்டு படகுப் போட்டி, பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நேரில் ஆய்வு செய்து, தோட்டக்கலைத் துறை, நகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவை பார்வையிட்டனர். இந்த ஆண்டு அனைத்து பருவங்களிலும் பூக்கும் வகையிலான செடிகள் நடப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்த்து, கொடைக்கானலை பசுமை சுற்றுலா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள், சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் 10 நாட்களும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கோடை வெயிலுக்கு இதமளிக்கும் கொடைக்கானலின் குளிர்ச்சியோடு, வண்ண மலர்களின் வாசமும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை இந்த மலர் கண்காட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b