மீண்டும் கிட்னி திருட்டு விவகாரத்தை கையில் எடுத்த தமிழக சுகாதாரத்துறை
சென்னை, 20 மே (ஹி.ச) தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தை தமிழக சுகாதாரத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா தலைமைய
Kydney


சென்னை, 20 மே (ஹி.ச)

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தை தமிழக சுகாதாரத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எந்தத் தோய்வும் இல்லாமல் தீவிரமாக விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சி, ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழைத் தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத சிறுநீரக விற்பனை நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல், திருச்சி, ஈரோடு மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோரிடமும், தமிழகத்தைச் சேர்ந்த கும்பலின் உதவியுடன் கிட்னி திருட்டு நடைபெற்றது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மஹாராஷ்டிரா மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சிறப்பு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள தமிழக அரசு, தொடர்புடைய யாராக இருந்தாலும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, எங்கு எங்கு இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ