Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தினசரி காலை 10:00 மணிக்குள் பணிக்கு வருகை தர வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
முதலமைச்சர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து அலுவல்களை தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதையொட்டி, அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தவும், கோப்புகள் தேக்கமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் இந்த நேரக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே துறைச் செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவுறுத்தல் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் நிரந்தர அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோருக்கும் பொருந்தும்.
தற்போது தலைமைச் செயலக வளாகத்தில் 5,500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
அரசு அலுவலகங்களில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை, முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான கோப்புகள் தாமதமின்றி நகர்த்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வருகைப் பதிவேடு முறையாக கண்காணிக்கப்படும் என்றும், நேரக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b