திருவாரூர் செய்தியாளர் மீதான தாக்குதல்,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் – சீமான் கண்டனம்
சென்னை, 20 மே (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை
சீமான்


சென்னை, 20 மே (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஹாஜா முகைதீன் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறி, இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர் முழு உடல்நலம் பெற்று விரைவில் மீண்டுவர வாழ்த்தியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக செயல்படும் ஒரு ஊடகவியலாளருக்கே இத்தகைய அச்சுறுத்தலும் வன்முறைத் தாக்குதலும் நடைபெறுமானால், சாதாரண மக்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து கேள்வி எழுகிறது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தில் போதைக் கும்பல்களின் செயல்பாடுகள், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், “மாற்று அரசியல்” என்ற பெயரில் ஆட்சி அமைந்திருந்தாலும், முந்தைய ஆட்சியில் நடந்த பிரச்சினைகளே தொடர்கின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

முதல்வராக பதவியேற்ற பின்னர் போதைப்பொருள் தடுப்புக்காக சிறப்பு அதிரடிப்படை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பு தற்போது என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் சீமான் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P