அதிமுகக்கு அமைச்சரவை கொடுத்தால் காங்கிரஸ் முடிவு ஆலோசனைக்குப் பிறகே தெரியவரும் - செல்வப்பெருந்தகை
சென்னை, 20 மே (ஹி.ச) சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Selva


சென்னை, 20 மே (ஹி.ச)

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசருக்கு மரியாதை செலுத்துவது பெருமைக்குரியது. 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைத்தார். அதற்காக நாங்கள் என்றும் நன்றி கூறுகிறோம் என்றார்.

மேலும், அயோத்திதாசர் மணிமண்டபம், காமராஜர் மணிமண்டபம் மற்றும் காந்தி மணிமண்டபம் ஆகியவற்றை அரசு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள் பதவியேற்பது குறித்த கேள்விக்கு,

தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர்க்க கூட்டணியில் கோரிக்கை வைத்ததாக வெளியான தகவல் குறித்து, ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்தும் தெளிவாக உள்ளது என்றார்.

திருமாவளவன் முதலமைச்சராக இருப்பது குறித்து திமுக–அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு,

அது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை என்று பதிலளித்தார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழகம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கருத்து குறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்டபோது,

இந்த கருத்தை காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு செல்வேன். அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

திமுக–அதிமுக இணைப்பு குறித்து பேசிய அவர்,

இரு கட்சிகளும் இணைகிறார்களா என்ற கேள்வி ஊடகங்களில் மட்டுமே உள்ளது.

அது நடைபெற வாய்ப்பு இல்லை என்பதே என்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல் குறித்து,

அது பற்றி அனைவருடனும் ஆலோசித்து பரிசீலனை செய்வோம் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ