கோடை விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு
சென்னை, 20 மே (ஹி.ச.) பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியூர் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்வோரின் வசதிக
கோடை விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு


சென்னை, 20 மே (ஹி.ச.)

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியூர் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகள் நெரிசலை தவிர்க்கவும், சிரமமின்றி பயணம் செய்யவும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து நாளை, மே 21-ஆம் தேதி 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தொடர்ந்து, மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 595 பேருந்துகளும், மே 23-ஆம் தேதி சனிக்கிழமை 650 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மே 23-ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் மே 23-ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் TNSTC மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b