இலங்கை தமிழ் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கேட்க வேண்டும் - வேல்முருகன்
சென்னை, 20 மே (ஹி.ச.) இலங்கை தமிழ் எம்.பி ராமநாதன் அர்ச்சுனா தமிழகம் வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட
TVK Velmurugan


சென்னை, 20 மே (ஹி.ச.)

இலங்கை தமிழ் எம்.பி ராமநாதன் அர்ச்சுனா தமிழகம் வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப் பருவத்தையும், குடும்பங்களையும், கல்வியையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.

தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு, நில அபகரிப்பு, ராணுவ அடக்குமுறை ஆகியவை தொடர்ந்து திணிக்கப்பட்டன. அமைதியாக உரிமை கேட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கிராமங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோரின் கண்முன்னே கொல்லப்பட்டார்கள்.

முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு வளையங்கள் கூட குண்டு மழையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.

உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டிருந்த கொத்துக் குண்டுகள், ரசாயன குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டன.

நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றன.

இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளை முழுமையாக அகற்ற முடியாமல், அந்தக் குண்டுகளோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் உயிர் வலியுடனும் மன உளைச்சலுடனும் அவர்கள் வாழ்க்கையைக் கடக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

போரின் காயங்கள் உடலில் மட்டுமல்ல. மனதிலும், தலைமுறைகளின் நினைவுகளிலும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. நிலங்களை இழந்தோம். தலைமுறைகள் சேர்த்து வைத்தச் சொத்துக்களை இழந்தோம். வீடுகளை இழந்தோம். நமது வாழ்வாதாரங்களையும் நிம்மதியையும் இழந்தோம்.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றப் பட்டியலில் இன்று வரை நீதியின்றி காணாமல் போனவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி நீதிக்காகக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.

உயிரோடு இருக்கும் போதே தமிழர்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. கைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழச்சிகளின் மார்புகள் அறுக்கப்பட்டன. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டார்கள்.

பச்சிளம் குழந்தைகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கூட இரக்கமின்றி கத்திகளால் கிழித்துக் கொல்லப்பட்டார்கள். மனித இனமே தலைகுனிய வேண்டிய கொடுமைகள் ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்டன.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17, 18 ஆகிய நாட்களில், முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வளையங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளே லட்சக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்து செய்யப்பட்ட இனப்படுகொலை, தமிழின வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான நமது தொப்புள் கொடி உறவுகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் இருந்த குழந்தைகள் உடல்சிதறி உயிரிழந்தார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.

பட்டினியாலும் குண்டுவீச்சாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளிலும் கடற்கரைகளிலும் சடலங்களாகக் கிடந்தார்கள். உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு இனத்தின் உயிர் பறிக்கப்பட்டது.

தாய் நிலத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெளியேறிய உறவுகள் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மண்ணை இழந்த வலியோடு, அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பெருநிலத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும், காட்டிக் கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது என பதவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN