டாஸ்மாக்கில் கூடுதல் ₹10 வசூலிக்கப்படுகிறதா?- நுண்ணறிவு போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவு
சென்னை, 20 மே (ஹி.ச) டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு ₹10 வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. முந்தைய காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில
Tasmac Protest


சென்னை, 20 மே (ஹி.ச)

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு ₹10 வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

முந்தைய காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் மீது கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிப்பதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

ஆனால், இதனை மீறி சில டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களுடன் புகார்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக பணம் வசூலிக்கும் டாஸ்மாக் கடைகள் குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

நுண்ணறிவு பிரிவு போலீசார் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க சென்னை காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ