Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய திருமண நிகழ்ச்சியில், காதலித்து ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டிய இளம்பெண் தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
வடபழனியில்உள்ள தனியார் மாலில் வேலை பார்த்தபோது, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் செய்து கொள்ள மதம் மாற வேண்டும் என சையது இப்ராஹிம் வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்று தாம் மதம் மாறிய பின்னரும் இருவரும் தொடர்ந்து உறவில் இருந்ததாகவும் இளம்பெண் கூறினார்.
இந்த நிலையில், தன்னிடம் தெரிவிக்காமல் வேறுொரு பெண்ணை சையது இப்ராஹிம் திருமணம் செய்து கொள்ள முயன்றதாகவும், தன்னிடமிருந்து ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டிய இளம்பெண், திருமணத்தை நிறுத்தக் கோரி ஆதரவாளர்களுடன் மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சையது இப்ராஹிம் முன்ஜாமின் பெற்று தற்போது திருமணத்திற்கு தயாரானதாகவும் இளம்பெண் தெரிவித்தார்.
இந்நிலையில், இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் வளர்மதியிடம் ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அங்கு இருந்த முதியவர் ஒருவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும் கூறப்படுவதால் சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam