Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 20 மே (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் மே 22-ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி மே 28-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இது குறித்து,அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளதாவது,
ஏற்காடு அண்ணா பூங்காவில் நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு உருவாக்கப்படும் கண்கவர் மலர் அலங்காரங்கள் மற்றும் மலர் சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளன.
மலர்க் கண்காட்சியுடன், உள்ளூர் விவசாயிகளின் விளைபொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரம்மாண்ட பழக் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன.
தமிழக கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து விழாவின் அனைத்து நாட்களிலும் மாலை நேரங்களில் பாரம்பரிய நடனம், நாட்டுப்புறக் கலைகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
மேலும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏற்காட்டின் இதமான சூழலை நாடி வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்து வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b