மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
புதுச்சேரி, 20 மே (ஹி.ச.) புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை கைப்பற்ற
Rangasamy


புதுச்சேரி, 20 மே (ஹி.ச.)

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது.

திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேட்சை 3 இடங்களையும் வென்றன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த 13-ம் தேதி பதவியேற்றார்.

அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர். தொடர்ந்து

18-ம் தேதி புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவை தலைவராக அன்பழகனை, ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை சட்டப்பேரவை தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் கூடியது.

தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதில் புதுச்சேரி மங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரங்கசாமி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடந்தது.

புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது,

புதுச்சேரி அரசு நலத்திட்டங்கள் தொடரும். மத்திய அரசுடனான உறவு நன்றாக உள்ளது. இது தொடரும். அமைச்சர் பதவிக்காக 100 கோடி ரூபாய் பேரம் யார் யாரிடம் பேசினார்கள் என்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தால் அதை விசாரிக்கலாம். தமிழகத்தில் புதிதாக அமைந்த அரசுக்கு பாராட்டுகள்.

தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்கள் சிறந்த முறையில் விஜய் செயல்படுவார் என்ற நம்பிக்கையுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்ற ஆனந்த்துக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது மகிழ்ச்சி. அனுபவமிக்க அவர் சிறப்பாக செயல்படுவார்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசி தமிழகப் பகுதியில் இடம்பெற்று விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பிரதமர் மோடி கூறியபடி புதுச்சேரி ‘பெஸ்ட் புதுச்சேரி’ ஆக மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த மாநிலமாக புதுச்சேரி திகழ்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி, அதை நிச்சயமாக பெறுவோம்.

பிரதமர் மனது வைத்து ஆளும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக அந்த நம்பிக்கை வெற்றி பெறும்.

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தபிறகு கட்சியில் யார் நிறுத்தப்படுவார் என்பது தெரியவரும்

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b