தமிழகத்தில் இளம் வயது அமைச்சரானார் அவிநாசி எம்.எல்.ஏ. கமலி
சென்னை, 21 மே (ஹி.ச.) முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு விழா இன்று (21.05. 2026 ) காலை 10.00 மணியளவில் சென்னையில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்
Avinashi MLA Kamali


சென்னை, 21 மே (ஹி.ச.)

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு விழா இன்று (21.05. 2026 ) காலை 10.00 மணியளவில் சென்னையில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான ஸ்ரீநாத், குமாரப்பாளையம் எம்.எல்.ஏ விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ ரஞ்சித்குமார் ஆகிய 23 பேரும் அடுத்தடுத்து அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

அவர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணங்களைச் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் 2இடம்பெற்றுள்ள 28 வயதான அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., கமலி தமிழகத்தின் இளம் அமைச்சர் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எளிய நடுத்தரக் குடும்பப் பின்னணி கொண்ட கமலி முதுகலை பட்டதாரி.

இவர், எம்.ஏ (ஆங்கிலம்) மற்றும் பி.எட் (M.A., B.Ed) படித்துள்ளார். அரசியலுக்கு வரும் முன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். குடும்பத்தில் இருந்து யாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. முதல்முறையாக அரசியலுக்கு நுழைந்த கமலிக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தார்.

அவிநாசி தொகுதியில் இவர் மொத்தம் 84,209 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துப் பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தினார்.

தன்னுடைய வெற்றி குறித்து பேசும்போது கூட, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கஷ்டங்களை நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வலியை இனி யாருக்கும் தந்துவிடக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்பட விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

அவிநாசி தொகுதியைப் பொறுத்தவரை பல அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனை மாற்ற என்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

அவிநாசி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழாவில் அவர் வாசலில் எம்.எல்.ஏ. என்ற எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் கோலம் போட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது.

அதேபோல் அதேபோல் அன்னூர் ஏ.எம் காலனியைச் சார்ந்த மாணவி தர்ஷினி தேவி என்ற மாணவி கல்லூரியில் சேர போதிய கல்வி உதவித்தொகை இல்லாததால் எம்.எல்.ஏ கமலியை சந்தித்து உதவி கோரி மனு அளித்தார் .

அடுத்த 12 மணி நேரத்தில் மாணவி இந்துஸ்தான் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ததும் பாராட்டைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b