பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம், 21 மே (ஹி.ச.) மத்திய அரசின் தொடர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சேலம் மாநகரின் மையப் பகுதியான கோட்டை மைதானம் அருகே இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்று
CPI and CPM parties staged protest


சேலம், 21 மே (ஹி.ச.)

மத்திய அரசின் தொடர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சேலம் மாநகரின் மையப் பகுதியான கோட்டை மைதானம் அருகே இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகளின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், இரு கட்சிகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு, மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையை கைவிடு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து போன்ற கோஷங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், உள்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக கலால் வரியைக் குறைத்து விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மத்திய அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் நேற்று சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b