Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடி தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக, விசிக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் ஆட்சியமைத்து வருகிறார்.
முன்னதாக இந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது தவெக தலைவர் விஜய், சாக்லேட்டுக்கு அடம் பிடிப்பதைப் போல அடம் பிடித்து எனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் காரணமாக குழந்தைகள் வீடுகளில் தங்களது பெற்றோர்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளை பரப்புரைக்கு பயன்படுத்தியதாகக் கூறி விஜய்க்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்தன. விஜய்க்கு எதிராக போலீசில் புகார்களும் அளிக்கப்பட்டன.
குறிப்பாக கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த வாசுகி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்குமாறு குழந்தைகளுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்து பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளார் என்றும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று
(21-05-26) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பற்றி திமுக, அதிமுக, தவெக பதில் தர வேண்டும் எனவும், குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b