Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 மே (ஹி,.ச.)
2025 - 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 762 மாணவ, மாணவிகளில், 21 ஆயிரத்து 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 740 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வருகிற மே 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று கல்வித்துறை சார்பில் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 740 மாணவர்கள், தங்களது கல்வியாண்டை இழக்காமல் இருக்க வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ள உடனடித் துணைத்தேர்வுக்கு மே 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது விடைத்தாள்களின் நகல்களைப் பெறுவதற்கும், உடனடித் துணைத்தேர்வு எழுதுவதற்கும் பின்வரும் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்:
விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க: மே 22-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை.
உடனடித் துணைத்தேர்வு நடைபெறும் நாட்கள்: ஜூலை மாதம் 7-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம்:
மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல்:
விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 17-ஆம் தேதி முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த உன்னத வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய தேதிகளுக்குள் விண்ணப்பித்துத் தேர்ச்சி பெற முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b