Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தாம்பரம் மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த போலி கணக்குகள் மூலம் தேவையற்ற செல்போன் அழைப்புகள் வந்ததாக பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சாய் குமார் ஐபிஎஸ் உத்தரவின்படியும், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் வேல்முருகன் அறிவுறுத்தலின்படியும், உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணின் ஆண் நண்பரான கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் தோகமலையைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் இந்த செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவர் தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் பகுதியில் பதுங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
அங்கு சென்ற தனிப்படை போலீஸார் சிவபிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புகார்தாரரை ஒருதலையாக காதலித்து வந்த அவர், அந்த பெண்ணின் அனுதாபத்தையும் நம்பிக்கையையும் பெறும் நோக்கில் இந்த பிரச்சனையை உருவாக்கியதாகவும், பின்னர் ஆறுதல் கூறி காதல் வலையில் சிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவபிரகாஷை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸாரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சாய் குமார் பாராட்டியதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ