Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச)
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். அதன்படி, வெளிநாடுகளில் தங்கி இருந்து பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு வருகை தந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதன் காரணமாக கடந்த தேர்தல்களை காட்டிலும் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற சிலர் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாக புகார்கள் எழுந்தன.
மேலும், அவர்கள் தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற போது விமான நிலையங்களில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதில், சுமார் 18 பேர் வரை கைது நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆபிரகாம்
(65 வயது) என்பவர் தோகா வழியாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்ததில், அது இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் என்பதும், இவர் இலங்கை நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
ஆனால், அவரது இடது கை ஆள்காட்டி விரலில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்ததை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் குடியுரிமை பெற்று தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவது தெரியவந்தது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்களிப்பதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக வந்துள்ளார்.
அதன்படி, அந்த வாக்குச்சாவடியில் சட்ட விரோதமாக தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர், இன்று அதிகாலை சுமார் 3: 50 மணியளவில் தோகா வழியாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள் மத்திய பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN