கோடம்பாக்கத்தில் சிலிண்டர் வெடித்து ஏசி மெக்கானிக் படுகாயம்
சென்னை, 21 மே (ஹி.ச.) சென்னை கோடம்பாக்கத்தில் ஏசி பழுது பார்க்கும் பணியின் போது சிலிண்டர் வெடித்ததில் ஏசி மெக்கானிக் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. க
Ac


சென்னை, 21 மே (ஹி.ச.)

சென்னை கோடம்பாக்கத்தில் ஏசி பழுது பார்க்கும் பணியின் போது சிலிண்டர் வெடித்ததில் ஏசி மெக்கானிக் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

கோடம்பாக்கம் தாஸ் புரத்தைச் சேர்ந்த எல். திலீபன், கோடம்பாக்கம் புலியூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஏசி பழுது பார்க்கும் கடையில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

ஏசி பழுதுபார்ப்பதற்காக 20 லிட்டர் சிலிண்டரிலிருந்து 10 லிட்டர் சிலிண்டருக்கு நைட்ரஜன் வாயுவை மாற்றிக் கொண்டிருந்தபோது, அழுத்தம் அதிகரித்ததால் சிறிய சிலிண்டர் திடீரென வெடித்தது.

இந்த வெடிப்பில் திலீபனின் இரு மணிக்கட்டுகளும் துண்டிக்கப்பட்டதுடன், உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உடன் பணியாற்றியவர்கள் அவரை மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் திலீபனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்தில் இரு கைகளையும் இழந்த சம்பவம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ