Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சாராக கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருடன் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து இன்றைய தினம் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 பேரை அமைச்சர்களாக தமிழ்நாடு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறையும் ராஜேஷ்குமாருக்கு சுற்றுலா துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற ரஞ்சித் குமார், தலைமைச் செயலகத்தில் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஊழலற்ற ஆட்சி தருவதாக கூறியுள்ளார். அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விஜய் பிரச்சாரம் செல்ல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. பல இடங்களில் அனுமதிகள் வழங்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தால் 200 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம்.
தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த துறையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வனத் துறையை மேலும் சிறப்பாக செயல்படுத்த பாடுபடுவேன். வெப்பம் அதிகரித்துள்ள காலங்களில் காட்டு தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்டுக்குள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவது, காடுகளை அழிப்பதற்கு யாரேனும் முயற்சி செய்தால் அதனைவலுவாக தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.
முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அமைச்சர் ரஞ்சித்குமாரின் தாயார், மனைவி மற்றும் மகள் வந்திருந்தனர். அப்போது ரஞ்சித் குமார் பதவியேற்பதைப் பார்த்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ரஞ்சித் குமாரின் மனைவி பிரேமா, எனது கணவருக்கு அமைச்சர் பதவி கிடைத்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளது. தளபதி விஜய்யை இரண்டாவது எம்.ஜி.ஆராக பார்க்கிறோம். எளியோரையும் எம்எல்ஏ ஆக்கி அமைச்சராகவும் அழகு பார்க்கிறார் என்றார்.
ரஞ்சித் குமாரின் தாயார் ஜோதி அம்மாள் கூறும்போது, புரட்சி தளபதி விஜய் கடவுள் மாதிரி. எல்லோருக்கும் நல்லதையே செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்.
எனது மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கியதை வாழ்நாளில் மறக்க முடியாது. ஆளுநர் மாளிகைக்கு வருவேன் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை. எல்லாமே கனவாக உள்ளது என தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN