திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் விதிமீறல் தரிசனம் - உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டு உத்தரவு
சென்னை, 21 மே (ஹி.ச) மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்திற்கு சென்றபோது நடைபெற்றதாக கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பாக அறநிலையத் துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கி
Ctr


சென்னை, 21 மே (ஹி.ச)

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்திற்கு சென்றபோது நடைபெற்றதாக கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பாக அறநிலையத் துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல்குமார் கோவிலுக்கு சென்றபோது, அவருக்காக கோவில் நடை அடைக்கும் நேரம் தாமதப்படுத்தப்பட்டதாகவும், மேலும் அவர் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, கோவிலில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டதா, அமைச்சர் வருகைக்காக பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா, கருவறைக்குள் அமைச்சர் அனுமதிக்கப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அமைச்சர் தரிசனத்திற்காக கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக வெளியாகிய தகவல்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின் உண்மை நிலை குறித்தும் அறநிலையத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை அறநிலையத் துறை செயலாளர் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பின்னர் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ