Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மே (ஹி.ச.)
மத்திய அரசின் முக்கிய கொள்கை ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘விக்சித் பாரத் 2047’ இலக்கை நோக்கிய செயல்திட்டம், மாநிலங்களின் நிதிநிலை, வேளாண்மை, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூட்டத்தின் விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் மாநில முதலமைச்சர் பங்கேற்பது வழக்கம். மாநிலத்தின் முக்கிய கோரிக்கைகள், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களுக்கான ஒப்புதல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கொள்கை ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் உயரிய அமைப்பாக நிதி ஆயோக் செயல்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b