Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 21 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க ரூ.20 கட்டணம் வசூல் செய்யப்படும் என முன்னதாக வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னரே இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வனத்துறையினரின் இந்த அறிவிப்பை எதிர்த்து சுபாஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இதேபோல் பல மாநிலங்களில் நடைமுறைகள் உள்ளதாகவும் ஆகவே வழக்கை தள்ளுபடி செய்வதாகும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், நேற்றைய தினம் குற்றால சீசன் காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் பழைய குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு ரூ.20 கட்டணம் செய்ய வேண்டாம் எனவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வனத்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இருந்தபோதும், மாவட்ட வன அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பணிகள் குளிக்க ரூ.20 வசூல் செய்யப்படும் முடிவு அமல்படுத்தப்படுமா? அல்லது வாபஸ் பெறப்படுமா? என்பது குறித்து தெரியவரும் என்கின்றனர் வனத்துறையினர்.
Hindusthan Samachar / ANANDHAN