Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தபோது பெரிய அளவில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜனநாயக முறைப்படி அல்லாமல், பணபலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் பெரும்பான்மையை நிரூபித்துள்ளனர் என்றும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கே.கே. ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கருதி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பல்வேறு பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ள கே.கே. ரமேஷ், சமீபகாலமாக அரசியல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகிறார்.
தவெக அரசு தரப்பிலிருந்து இதுவரை இந்த மனு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.
Hindusthan Samachar / vidya.b