Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச)
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 23 புதிய அமைச்சர்கள் இன்று (மே 21) பதவியேற்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஆகையால், இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பதவியேற்பு நிகழ்வுக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,
.ராஜீவ் காந்தி நினைவேந்தலில் பங்கேற்றுவிட்டு அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்துள்ளோம். ஒவ்வொருவரும் தமிழ்நாடு மக்களும், ராஜீவ் காந்தியின் தியாகத்தை நினைவில் கொள்ள வேண்டும். அவர் எப்படி இந்தியாவின் பெருமைகளை தலை நிமிர வைத்தார், விஞ்ஞான யுக புரட்சியாக இருக்கட்டும், அமெரிக்கா இந்தியாவை ஒருபோதும் அடிபணிய முயற்சிக்காதது என அனைத்திற்கு காரணம் ராஜீவ் காந்தி தான்.
ராஜீவ் காந்தி காலத்தில் இந்தியா தலைநிமிர்ந்து இருந்தது. ஆனால், இன்று இந்தியா எந்தநிலையில் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். இத்தகைய மாபெரும் தலைவரின் நினைவேந்தல் நாளில் எங்களுடைய இரு அமைச்சர்கள் பொறுப்பேற்கிறார்கள். அவர்கள் நிச்சயம் மக்களுக்காக உழைப்பார்கள் என்றார்.
இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,
தமிழ்நாட்டில் கடந்த 59 ஆண்டுகளாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தது. இப்போது அது அதிகாரத்திற்கு திரும்பி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக கூட்டாட்சிக்கு தமிழ்நாடு மக்கள் வாக்களிக்காமல் இருந்தார்கள். இப்போது தமிழக வெற்றி கழகத்தின் கூட்டாட்சிக்கு மக்கள் தங்களின் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் மதிக்கின்றோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. ஒரு தரப்பு அதிமுக-வினர் என்டிஏ கூட்டணியிலும், மற்றொரு தரப்பு அந்த கூட்டணியில் இல்லை என்றும் சொல்கிறார்கள். இவர்களை தவெக-வில் இணைப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆகையால், பொறுத்திருந்து பார்ப்போம்.
தவெக உடன் இணைந்த விவகாரத்தில், எங்கள் தலைவர்கள் எங்களுக்கு ஒரு வழிகாட்டுதலை வழங்கி உள்ளார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து நாங்கள் தவெக உடன் பயணிக்கிறோம். அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம். யாருக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.
மேலும், இந்தியா கூட்டணி இப்போது வரை செயல்பட்டு தான் வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN