Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும், தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காகவும் தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில் மே 23, 30 மற்றும் ஜூன் 6, 13 ஆகிய தேதிகளில், அதாவது வெள்ளிக்கிழமைகளில் இரவு 10:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இரவு புறப்படும் இந்த ரயில், மறுநாள் சனிக்கிழமை காலை 11:15 மணிக்கு போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல், போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு மே 24, 31 மற்றும் ஜூன் 7, 14 ஆகிய தேதிகளில், அதாவது சனிக்கிழமைகளில் மாலை 4:45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வார இறுதியில் சொந்த ஊர் செல்பவர்களுக்கு இது பெரும் வசதியாக அமையும்.
இந்த சிறப்பு ரயில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக இந்த ரயில் போடிநாயக்கனூரை சென்றடையும். இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
கோடை கால கூடுதல் கூட்டத்தை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவை ரயில்வே இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் செய்து கொள்ளலாம்.
Hindusthan Samachar / vidya.b