Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வப் பதவியேற்பு விழா இன்று (21.05. 2026 ) காலை 10.00 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதையடுத்து 23 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அவர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணங்களைச் செய்து வைத்தார்.
இந்த விழாவில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளி வந்த மாதரம் பாடலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வராக விஜய் மற்றும் அவருடன் சக தவெக எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொள்ளும் விழாவின் போதும் வந்தே மாதரம் பாடல் முதலாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாகவும் பாடப்பட்டது.
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b