Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
தமிழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்க பதவியேற்பு விழாவில், நிகழ்ச்சி தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘ஜன கண மன’ பாடல்களுக்கு முன்னுரிமை வழங்கி, ‘நீராரும் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முந்தைய ஆட்சியில் தமிழுக்கு முதலிடம் அளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில், தற்போதைய நிகழ்ச்சியில் தமிழுக்கு மீண்டும் மூன்றாவது இடம் வழங்கப்பட்டிருப்பது ஏற்க முடியாதது என கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாட்டின் மொழி மரபு மற்றும் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக எதிர்ப்புகள் எழுந்தபோது, இனிமேல் தமிழை மூன்றாவது இடத்திற்குத் தள்ளும் நிலை ஏற்படாது என புதிய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கி.வீரமணி, அந்த வாக்குறுதி சில நாட்களிலேயே மீறப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த பதவியேற்பு விழா அரசு பொதுத்துறை ஏற்பாட்டில், முதலமைச்சரின் ஒப்புதலுடன் நடைபெற்றிருக்க வேண்டிய நிகழ்வு என்பதால், இதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழை புறக்கணிக்கும் எந்த அணுகுமுறையையும் தமிழ்நாடு ஏற்காது என்றும், இது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய பிரச்சினை என்றும் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P