Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் 21 மே (ஹி.ச)
தெலங்கானாவில் நிலவி வரும் பயிர் கொள்முதல் நெருக்கடியை சுட்டிக்காட்டி, பி.ஆர்.எஸ். செயல் தலைவர் ராமா ராவ் , மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி க்கு திறந்த கடிதம் எழுதியுள்ளார்.
தனது அறிக்கையில் :
மாநிலத்தில் விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசு இன்னும் எவ்வளவு நாள் மந்தநிலையிலேயே இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலம் முழுவதும் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடும் வெப்பம் மற்றும் அரசின் தாமதம் காரணமாக இதுவரை சுமார் 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரங்கல் முதல் கம்மம் வரை பல இடங்களில் தினசரி கொள்முதல் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் ஒரு குவிண்டாலுக்கு 10 கிலோ வரை குறைத்து எடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கன்னி மூட்டைகளுக்காக விவசாயிகளிடமிருந்து ரூ.50 டெபாசிட் வசூலிப்பது அவமானகரமானது என்றும் விமர்சித்தார்.
பி.ஆர்.எஸ். ஆட்சி காலத்தில், முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்கூட்டியே திட்டமிட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக பயிர்களை முழுமையாக வாங்கும் நடைமுறை இருந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் தற்போதைய அரசு, அசாதாரண மழையிலிருந்து பயிர்களை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகள் கூட செய்யவில்லை என்றும் கூறினார்.
சட்டசபை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி போனஸ் வழங்கப்படவில்லை என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கொள்முதல் செய்ய முடியாவிட்டால் 60 லட்சம் விவசாயிகளிடம் முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கொள்முதல் மையங்களில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரேவந்த் ரெட்டி வரலாற்றில் ‘விவசாய துரோகி’யாக நினைவுகொள்ளப்படுவார் என கே.டி.ஆர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA