Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 21 மே (ஹி.ச.)
கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இலவச தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது நான்கு கிலோமீட்டர் நீளமான வரிசையில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்து வருகின்றனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக, நேற்று ஒரே நாளில் 86 ஆயிரத்து 315 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர்.
கோவில் உண்டியலில் பக்தர்கள் மூன்று கோடியே 94 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்றும் அதே நிலை நீடித்து வரும் நிலையில், இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை முடியும் வரை இந்த நிலை தொடரக்கூடும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பக்தர்கள் வருகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு விஐபி பிரேக் தரிசன முறையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கும் நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்து வழங்கி வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P