வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்
காஞ்சிபுரம், 21 மே (ஹி.ச) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடல் பெற்ற தலமாக விளங்கும் சிறப்பு பெற்றது. வல்லக்கோட்டை முருகன் கோயில்,
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்


காஞ்சிபுரம், 21 மே (ஹி.ச)

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடல் பெற்ற தலமாக விளங்கும் சிறப்பு பெற்றது.

வல்லக்கோட்டை முருகன் கோயில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு மூலவர் 7 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

இந்த ஆலயத்தில், 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று (மே 21-ம் தேதி ) வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.

இன்று முதல் வரும் மே 30-ம் தேதி வரை 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் சேவல் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடைபெறும் பிரம்மோற்சவம் என்பதால், அதிகாலை முதலே காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 28-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து தீர்த்தவாரி, தெப்ப உற்சவம் ஆகியவை நடந்து, மே 30-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், அன்னதானம், மருத்துவ வசதி மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b