Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 21 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்களில் கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலும் ஒன்று.
இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் வைகாசி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
அந்த வகையில் பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா, இன்று
(மே 21) காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற திருநாளை முன்னிட்டு, இன்று காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் உகந்த சுப முகூர்த்தத்தில், வேத மந்திரங்கள் முழங்க வைகாசிப் பெருந்திருவிழாத் திருக்கொடியேற்றம் மிக விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த மங்களகரமான பிரம்மோற்சவப் பெருவிழா, வரும் மே மாதம் 30-ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெற உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் தினமும் பகவதி அம்மனுக்குப் பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், உச்சி காலப் பூஜைகள், இரவு மங்களகரமான வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் உன்னத நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மே 29 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இந்த 10 நாட்கள் திருவிழாவிலும் காலை 10 மணிக்கு நடக்கும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து வரப்படும்.
நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது இந்த வெள்ளிக்குடத்தை வைத்து மேளதாளங்களுடன் விமரிசையாகக் கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b