Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச)
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீநாத் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் கல்லூரி காலத்து மிக நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் (52), 'நாளைய தீர்ப்பு' படம் முதலே அவருடன் திரையுலகிலும் பயணித்தவர். 'உள்ளம் கேட்குமே', 'சந்தோஷ் சுப்ரமணியம்' உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமான இவர், தவெக-வின் ஆரம்பகாலம் முதலே இணைந்து களப்பணியற்றினார்.
52 வயதான ஸ்ரீநாத் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை வீழ்த்தினார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீநாத் உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியிருப்பதாவது:
எனது தலைவரும் நண்பருமான முதலமைச்சருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எங்களது ஆட்சியில் மக்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்து, அவர்கள் அமைதியான சமூக வாழ்க்கையை வாழ்வதை உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்வேன்.
குறிப்பாக, மீனவர்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் தொழில் செய்வதையும், மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதையும் இந்த மீன்வளத்துறை அமைச்சக உள்கட்டமைப்பு முழுமையாக உறுதி செய்யும்.
முதல் நாளிலிருந்தே, எனது தலைவரிடமிருந்து ஒரு நண்பராக நான் நிறைய கற்று வருகிறேன். அவரோடு கல்லூரியில் பயணித்தேன், சினிமாத் துறையில் பயணித்தேன், இப்போது அரசியலிலும் பயணிக்கிறேன். ஒரு அரசியல்வாதியாக அவரிடமிருந்து தினமும் புதிய உத்திகளைக் கற்று வருகிறேன்.
அவர் எப்போதும் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவருடைய அசாத்திய ஒழுக்கம், நேரந்தவறாமை, நேர்மை மற்றும் கருணை ஆகியவற்றை நான் எப்போதும் பின்பற்றுவேன். கடைசி வரை அவருடன் மட்டுமே இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b