Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மே (ஹி.ச.)
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த சில நாட்களாக மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறைகள், டெண்டர் நடைமுறைகள் மற்றும் நிலக்கரி கொள்முதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
எங்கு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதோ அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் மின்சாரத் துறை எந்த வித லஞ்சமும், முறைகேடும் இல்லாமல் செயல்படும். மறைமுக டீலிங் இருக்காது. யாரும் துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்து செயல்பட முடியாது என அமைச்சர் கூறினார்.
அறிவிக்கப்படாத மின்தடை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்,
160-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக மின்கம்பிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்ஃபார்மர்களிலும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
எந்த காரணங்களால் மின்தடை ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
மேலும், சமூக வலைதளங்களில் மின்வாரியத்தை குறிப்பிட்டு பதிவிடப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.2.5 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
அடிப்படையில் இருந்து முழுமையான நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மின்கட்டண உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
அரசாக முன்னெடுத்து மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கனவே உள்ள நடைமுறைகளில் மாற்றமில்லை என்று விளக்கம் அளித்தார்.
டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர்,
யார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சட்டப்படி தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இனிமேல் எந்த புரோக்கருக்கும் இந்த அலுவலகத்தில் வேலை இல்லை. ஒரு சில நபர்களுக்காக டிரான்ஸ்பர்கள் செய்யப்பட்டுள்ளன.
இனிமேல் துண்டுச்சீட்டு இல்லாமல் வெளிப்படையான டிரான்ஸ்பர்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ