நாளை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351-வது சதய விழா - அதிமுக சார்பில் மரியாதை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
திருச்சி, 22 மே (ஹி.ச.) தமிழகத்தின் புகழ்பெற்ற பேரரசர்களில் ஒருவரான பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழா, திருச்சி ஒத்தக்கடை பகுதியில் நாளை (மே 23) வெகு விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட ம
1,351st Sathaya Vizha (Birth Anniversary)


திருச்சி, 22 மே (ஹி.ச.)

தமிழகத்தின் புகழ்பெற்ற பேரரசர்களில் ஒருவரான பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழா, திருச்சி ஒத்தக்கடை பகுதியில் நாளை (மே 23) வெகு விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு நாளை காலை 10:00 மணியளவில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவர்,சங்க காலத்தில் உதித்த சரித்திர நாயகர்; முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவர், முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரியவர், பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.

தமிழ் மொழியைக் காத்ததிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை, காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் அவர்கள் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது.

கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.

அரசர்கள் போருக்குச் செல்லும் முன்பு வஞ்சிப் பூவையும், போரில் வெற்றி பெற்ற பின்னர் வாகைப் பூவையும் சூடுவது வழக்கம். ஆனால், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் போருக்கு செல்லும்போதே வாகைப் பூவை சூடிக்கொண்டு வெற்றி என்றும் நமதே என்று சொல்வாராம்.

அந்த வகையில், தன் வாழ்நாளில் 16 பெரும் போர்களில் தோல்வியே காணாத மாபெரும் அதிதீரன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் மட்டுமே.

போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351-ஆவது சதய விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 23.5.2026 - சனிக் கிழமை காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான திரு. R மனோகரன், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C. கார்த்திகேயன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. N. யோகநாதன் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெறும் என அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருச்சி மாநகரம் முழுவதும் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு அலங்கார வளைவுகள், பதாகைகள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறையினர் செய்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b