ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு தூத்துக்குடியில் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
தூத்துக்குடி, 22 மே (ஹி.ச.) சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் உச்சகட்டமாக 2018 மே 22-ம் தேதி நடைபெற்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு தூத்துக்குடியில் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி


தூத்துக்குடி, 22 மே (ஹி.ச.)

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதன் உச்சகட்டமாக 2018 மே 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 15 என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம், மாநிலத்தின் மிக முக்கியமான மக்கள் எழுச்சி போராட்டங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று 8-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பாத்திமா நகரில் திரண்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தினர்.

உயிர்நீத்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த அவர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தின் நோக்கங்களையும் மக்களின் கோரிக்கைகளையும் மீண்டும் வலியுறுத்தினர்.

நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்றோர் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடி நகரில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக இருந்தது.

துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பங்கேற்பாளர்கள், அந்தப் பரிந்துரைகளை உடனடியாக முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரினர்.

இறுதியாக, ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கையையும் அவர்கள் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தனர்.

8 ஆண்டுகள் கடந்தும் நீதிக்கான போராட்டம் தொடர்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை தங்கள் குரல் ஓயாது என்றும் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b