Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
தமிழக அரசின் உள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று (21.05.206) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றும் அபின் தினேஷ் மோடக் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவர் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக, கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (மே 22) காலை சென்னை காவல் ஆணையராக பதவியேற்றுக் கொள்கிறார்.
1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக இந்திய காவல் பணியில் சேர்ந்த அமல்ராஜ் காவல்துறையில் பல்வேறு முக்கிய பதவி வகித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்த்தை சேர்ந்த இவர் தமிழகத்தில் திருப்பூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கி அதன்பிறகு பதவி உயர்வு பெற்று மதுரையில் துணை கமிஷனராக பணியாற்றினார்.
தர்மபுரி, தேனி, காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார்.
ராமநாதபுரம், திருச்சி, சேலம் ஆகிய சரகங்களில் டி.ஐ.ஜி.யாகவும் சிறப்பாக பணியாற்றினார். ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சேலம், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கமிஷனர் பொறுப்பு வகித்துள்ளார்.
இயற்பியல் பிரிவில் பி.எஸ்.சி. மற்றும் எம்.எஸ்.சி. பட்டபடிப்பு படித்துள்ள இவர் சென்னையிலும் கூடுதல் கமிஷனராக பணிபுரிந்துள்ளார்.
கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற பிறகு தாம்பரம் போலீஸ் கமிஷனராக 2 முறை பணியாற்றியுள்ளார்.
காவல்துறையில் நேர்மையான அதிகாரி என நற்பெயரெடுத்த அமலராஜ் தலைசிறந்த பணிக்காக ஜனாதிபதி விருதுபெற்றுள்ளார்.
தமிழக முதலமைச்சர் பதக்கமும் சிறந்த பணிக்காக இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடு, போராட கற்றுக்கொள், வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள் என்ற தலைப்புகளில் 5 புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
Hindusthan Samachar / vidya.b