4 மாத கர்ப்பிணிக்கு சட்டவிரோத கருக்கலைப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் சிகிச்சை – முக்கிய குற்றவாளி கைது
சேலம், 22 மே (ஹி.ச) சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 25 வயதான 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்த
கைது


சேலம், 22 மே (ஹி.ச)

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 25 வயதான 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

முதலில் மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்ய முயன்றும் பலன் அளிக்காததால், பின்னர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் முறையற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக உடல்நிலை மோசமடைந்த பெண் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இறந்த நிலையில் இருந்த 4 மாத பெண் குழந்தையை அகற்றினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் நந்தினி, ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த மதுபாலா என்ற கருக்கலைப்பு புரோக்கர், சித்தேரி பகுதியைச் சேர்ந்த புவனா, பெரியேரி பகுதியைச் சேர்ந்த கௌரி ஆகியோர் சேர்ந்து கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே 3 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நாராயணனை தலைவாசல் போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam