ஏர் இந்தியா விமானத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு - 181 பயணிகள் உயிர்தப்பினர்
பெங்களூரு, 22 மே (ஹி.ச.) டெல்லியில் இருந்து 181 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சேர்ந்த ஏ321 வகை விமானம் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. சுமார் 3 மணி நேர பயணத்திற்குப் பிறகு, அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அ
D


பெங்களூரு, 22 மே (ஹி.ச.)

டெல்லியில் இருந்து 181 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சேர்ந்த ஏ321 வகை விமானம் பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

சுமார் 3 மணி நேர பயணத்திற்குப் பிறகு, அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

அப்போது, தரையிறங்கும் தருணத்தில் விமானத்தின் வால்பகுதி ஓடுதளத்தில் பலத்த சத்தத்துடன் மோதியது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் விமானி தன்னுடைய சாதுர்யத்தால் உடனடியாக விமானத்தை மீண்டும் மேலே இயக்கினார்.

பின்னர், வானில் ஒரு முறை சுற்றிவிட்டு, விமானத்தை மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

இந்த சம்பவத்தில் விமானத்தின் வால்பகுதி சேதமடைந்தது. எனினும், விமானத்தில் இருந்த 181 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உயிரிழப்பு எதுவும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதே ஓடுதளத்தில் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட காற்றழுத்த மாற்றம் காரணமாக விமானம் சமநிலையை இழந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்குப் பிறகு, சேதமடைந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூருவில் இருந்து டெல்லி செல்ல இருந்த அதே விமான சேவை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறா அல்லது விமானியின் தவறா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிவடையும் வரை சம்பந்தப்பட்ட 2 விமானிகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA