Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் தலைமையில், ப.அரூண், சி.நித்தியானந்தன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது,
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் தூர்வார நிதி ஒதுக்கப்படுவது போல, பிஏபி பாசனத் திட்டத்திற்கும் ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகளுக்காக தனிநிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதன்மூலம் 4.25 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தனர்.
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் காண்டூர் கால்வாயின் பல பகுதிகள் முழுமையடையாமல் உள்ளதாகவும், பிரதான கால்வாய் மற்றும் கிளை, பகிர்மான கால்வாய்களில் உள்ள ஷட்டர்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக பெருமளவு பாசன நீர் வீணாகி, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சுற்று தண்ணீர் விநியோகம் முடிவடைய ஒரு மாத காலம் ஆகுவதால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் கூறினர்.
கோரிக்கைகளை கவனமாக கேட்ட அமைச்சர் என்.ஆனந்த், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகளின் நலனில் அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ